Site icon Tamil News

(Updated) யாழில் கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் இடையில் கலந்துரையாடல்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்

இலங்கை கடற்றொழிலாளர்கள் மொழி, மத வேறுபாட்டிற்கு அப்பால் ஒற்றுமையாக செயல்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர்கள் சமாசத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருக்கின்ற கடற்றொழில் மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் நிறைவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுடைய அழைப்பை ஏற்று இலங்கையில் இருக்கின்ற கடலோர மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், கிராமிய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த கலந்துரையாடலை நடாத்தியிருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு என 4 திசைகளையும் இணைத்து ஒன்றுபட்டு எதிர்காலத்தில் ஒற்றுமையாக செயல்படுவதன் நோக்கமாகவே இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாவன,

இலங்கை கடற்றொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயல்படுவது,
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட இருக்கின்ற 96 ஆம் ஆண்டின் இரண்டாம் இலக்க சட்டத்துக்கு பதிலாக புதிய வரைவு ஒன்று கொண்டுவரப்பட்டிருக்கிறது, அந்த வரைவை இலங்கை கடத்தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து இன்று யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் வைத்து நாங்கள் அதனை நிராகரிக்கின்றோம்.

அந்த வரைவு கடற்றொழிலாளர்களுக்கு ஏற்புடையது அல்ல எனவும், அந்த வரைவை முற்றாக நிராகரிப்பதோடு, இரண்டாவது விடயமாக இலங்கை கடற் பகுதியிலே வெளிநாடுகளுக்கு கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி கொடுப்பதையும், இலங்கை பூராகவும் இருக்கின்ற கடற்றொழில் சங்கங்கள் அதனை நிராகரிக்கின்றது.

அதேபோன்று சட்ட திருத்தங்கள் கொண்டு வருகின்ற போது மீனவ மக்களுடைய கருத்துக்களை உள் வேண்டப்படாமல் அல்லது மீனவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அரசாங்கம் ஏன் இந்த சட்டத்தை இவ்வளவு விரைவாக மறைமுகமாக கொண்டு வருகின்றது என்பது சந்தேகமாக இருக்கின்றது,

அதேபோன்றுதான் இன்றைய கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த சட்டமூலத்தை நிராகரித்து எதிர்வரும் காலங்களில் இலங்கை கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு கரையோர மாவட்டங்களில் கிராமங்களுக்கும் சென்று கையெழுத்து வேட்டை பெற்று அந்த கையெழுத்தினை இலங்கையினுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், இலங்கையினுடைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி அவர்களுக்கும் இந்த சட்ட வரைவு தொடர்பான மகஜரை இலங்கை கடலோர மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையெழுத்து வேட்டை வழங்குவது என்ற தீர்மானமும், இரண்டாவது இலங்கை கடற்பரப்புக்குள் எந்த ஒரு வெளிநாட்டு மீனவர்களுக்கும் அனுமதி வழங்க முடியாது அதனை கடத்தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் நல்ல தீர்மானத்தையும் நாங்கள் இன்று எடுத்திருக்கின்றோம்.

அதேபோன்று இலங்கை அரசாங்கத்தினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மீனை முற்றாக நிறுத்த வேண்டும் என்கின்ற கருத்தும் இன்று எட்டப்பட்டிருக்கின்றது.

எதிர்காலத்தில் இந்த கடற்றொழிலாளர் சங்கங்கள் ஏனைய மாவட்டங்களில் கூட்டங்களை கூடி மிக விரைவில் இந்த கையெழுத்து வேட்டைக்கான அறிக்கையை தயாரித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கையெழுத்தை பெற்று அனுப்புவது என்ற முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

எதிர்காலத்தில் இலங்கை கடற்றொழிலாளர்கள் மொழி, மத வேறுபாட்டிற்கு அப்பால் ஒற்றுமையாக ஒன்று பட்டு செயல்படுவதற்கு தீர்மானத்தில் இணைக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம். தென் இலங்கையில் இருந்து 20க்கும் மேற்பட்ட கடற்றொழில் அமைப்புகள் இன்று கலந்துரையாடலில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்” என தெரிவித்துள்ளார்.-

வடக்கு, கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு என 4 திசைகளையும் இணைத்து ஒன்றுபட்டு எதிர்காலத்தில் ஒற்றுமையாக செயல்படுவதன் நோக்கமாகவே இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலுக்கு, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும், உலக மீனவர் இயக்கத்தின் செயலாளருமான ஹேமன் குமார, சமூக செயற்பாட்டாளர் செல்வின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version