Tamil News

கர்நாடகா – முதலைகள் உள்ள கால்வாயில் வீசப்பட்ட 6 வயது சிறுவன் ; பெற்றோரை கைது செய்த பொலிஸார்

கர்நாடகாவில் தனது ஆறு வயது மகனை, முதலைகள் உள்ள கால்வாயில் வீசி கொன்ற சம்பவத்தில் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், ஹலமதி கிராமத்தில் வசிப்பவர் சாவித்திரி (32). இவரது கணவர் ரவிக்குமார் (36).இந்த தம்பதிக்கு 6 வயதில் வினோத் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் குழந்தை வினோத்திற்கு செவித்திறன், பேச்சு குறைபாடு இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, சாவித்ரி அன்று இரவு 9 மணியளவில், குழந்தை வினோத்தை தனது வீட்டின் அருகேயுள்ள கால்வாயில் வீசியுள்ளார். இந்த கால்வாய், முதலைகள் வசிக்கும் காளி ஆற்றுடன் இணைவதாகும்.

கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை தேடும் பணி (கோப்பு படம்)

இந்நிலையில் குழந்தை கால்வாயில் வீசப்பட்டது குறித்து தகவலறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படைவீரர்கள் உடனடியாக அங்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அன்று குழந்தை வினோத்தின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை, தேடுதல் குழுவினர் குழந்தையின் உடலை முதலையின் தாடையில் இருந்து மீட்டனர், அது அவரது வலது கையை ஓரளவு விழுங்கி இருந்தது. உடலில் பலத்த காயங்கள் மற்றும் கடித்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தை கால்வாயில் வீசி கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய் சாவித்திரி, தந்தை ரவிக்குமார் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

தன் கணவரின் சித்திரவதை காரணமாக தான் குழந்தையை கால்வாயில் வீசி கொன்றதாக சாவித்திரி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர். 6 வயது மகனை பெற்ற தாயே கால்வாயில் வீசி கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version