Site icon Tamil News

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருப்பதாக எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

விஞ்ஞான பீடத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, நேற்று (22) முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது :

இன்று எம்மால் முன்னெடுக்கப்பட்ட கல்விப் புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்குக்கொண்டு வருகின்றோம்.

அத்துடன் கீழ்க்காணும் முறைப்பாடுகளை ஆதாரபூர்வமாக விஞ்ஞான பீட நிர்வாகத்துக்கு நிரூபித்துள்ளோம்.

1. கற்பிக்கப்படாத பாட வேளைகளுக்கு வரவு கவனத்தில் எடுக்கப்பட்டமை.

2. விரிவுரைகள் நடத்தப்பட்ட பாடவேளைகள் (lecture hours), நியமமாக நடாத்தப்பட வேண்டிய மணித்தியாலங்களை விட குறைவாகக் காணப்படுகின்றமை.

3. அனேகமான இரசாயனவியல் துறை மாணவர்கள் மருத்துவச் சான்றிதழ்கள் இன்றி அதிகளவு விடுமுறைகளில் இருந்தும் மன்னிப்பு அடிப்படையில் (excuse) பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகள் நிர்வாகத்தரப்பிடம் இருந்தும் மாணவர்களின் வரவுகளை வைத்து பல மாணவர்களை பரீட்சைகளுக்கு தோற்ற அனுமதி மறுக்கப்பட்டமை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும்.

எனவே, இம்முறை பரீட்சைக்கு வரவுகள் கவனத்தில் எடுக்கப்படாமல் அனைத்து மாணவர்களையும் முதல் தவணை பரீட்சைகளுக்கு தோற்ற அனுமதிக்குமாறு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் சார்பாக தெளிவாக தெரிவிக்கின்றோம்.

தவறும்பட்சத்தில் விஞ்ஞான பீட நிர்வாகத்துக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதையும் அறித்தருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது

Exit mobile version