Tamil News

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக ஆரம்பம்

ஒன்பதாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமானது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க், யாழிற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,ஜேர்மன் கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், விழா இயக்குனர் அனோமா ராஜகருணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த திரைப்பட விழா எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் திரையிடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபம், கலம், கார்கிர்ல்ஸ் சதுக்கத்தில் உள்ள றீகல் திரையரங்கில் நடைபெறவுள்ளன.

சுயாதீன திரைப்படக்கலைஞர்களை ஊக்குவிக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இலங்கையில் இடம்பெறும் ஒரேயொரு சர்வதேச திரைப்பட விழாவாகும்.

இம்முறையும் பல சர்வதேச குறும்படங்களுடன் நம்மவர்களின் குறும்படங்கள் போட்டியிடுகின்றன. அத்துடன் நம்மவர்களின் திரைப்படங்களான மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு, ஈழவாணியின் லூசி, காரை சிவநேசனின் புஷ்பக27 ஆகியனவும் திரையிடப்படுகின்றன.

திரையிடல்களுக்கு சமாந்தரமாக துறைசார் விற்பன்னர்களால் சினிமாசார் பயிற்சி பட்டறைகளும்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளன.-

Exit mobile version