Site icon Tamil News

பிரதமர் நெதன்யாகுவைக் கொல்ல ஈரான் தீட்டிய சதித்திட்டத்தில் தொடர்புடைய இஸ்‌ரேலியர் கைது

இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டின் மற்ற உயர் அதிகாரிகளைப் படுகொலை செய்ய ஈரான் தீட்டிய சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலிய குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.அந்த நபர் ஈரானுக்குள் இரண்டு முறை கடத்தப்பட்டதாகவும், ரகசியப் பணிகளை மேற்கொள்ள பணம் பெற்றதாகவும் இஸ்ரேலிய காவல்துறையினரும் உள்நாட்டு உளவுத்துறையினரும் கூறினர்.

அந்த சந்தேக நபர் துருக்கியில் வசித்து வந்த ஒரு தொழிலதிபர் என்றும் அவரை ஈரானுக்குள் கொண்டு வர துருக்கிய தொடர்புகள் உதவியதாகவும் அவ்விரு அமைப்புகளும் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த வட்டாரத்தின் எரிகளான ஈரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையே பதற்றம் உயர்ந்து வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அடையாளம் தெரியாத சந்தேக நபர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்நபரின் இலக்குகள் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட்டின் தலைவர் ஆகியோர் என்று அறிக்கை கூறியது.

ஏப்ரல், மே மாதங்களில், சந்தேக நபர் எடி என்ற ஈரானிய பணக்காரத் தொழிலதிபரை சந்திப்பதற்காகத் துருக்கியில் உள்ள சமண்டாக் நகருக்கு இரண்டு முறை பயணம் செய்தார் என்றும் அதற்கு இரண்டு துருக்கிய குடிமக்கள் அவருக்கு உதவினார்கள் என்றும் கூறப்பட்டது.

ஈரானுக்காக, இஸ்ரேலுக்குள் பல்வேறு பாதுகாப்பு, உளவு பணிகளை மேற்கொள்ளுமாறு எடி அந்த இஸ்ரேலியரிடம் கேட்டுக் கொண்டதாகவும் அறிக்கை மேலும் கூறியது.

பணம் அல்லது துப்பாக்கியைப் பரிமாற்றம் செய்வது, இஸ்ரேலில் நெரிசலான இடங்களைப் புகைப்படம் எடுத்து ஈரானிய உளவு அமைப்புகளுக்கு அனுப்புவது போன்றவை அந்தப் பணிகளில் அடங்கும் என்றும் அறிக்கையில் விவரிக்கப்பட்டது.

Exit mobile version