Tamil News

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 8 பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் பலி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீனத்தில் காசா பகுதியை ஹமாஸ் ஆட்சி செய்கிறது. அந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. ஹமாஸ் போன்ற வேறு சில ஆயுதக் குழுக்கள் காசா பகுதியிலும் மேற்குக் கரையிலும் செயல்படுகின்றன. அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேற்குக் கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தப் பகுதிகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக்கரை நகரமான ஜெனினில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து ஜெனின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ராணுவ நடவடிக்கையில் இறங்கியது. முதலில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்படும் கட்டிடங்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

பின்னர், இஸ்ரேலியப் படைகள் ஜெனின் நகருக்குள் நுழைந்தன. அப்போது, அங்கு மறைந்திருந்த பாலஸ்தீன ஆயுதக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 பாலஸ்தீன போராளிகள் கொல்லப்பட்டனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீன ஆயுதப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதால் ஜெனின் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Exit mobile version