Tamil News

வரும்காலங்களில் இஸ்ரேல் பெரும் பின்னடைவைச் சந்திக்கும்… ஒபாமா எச்சரிக்கை!

தற்போதைய காசா தாக்குதலால் இஸ்ரேல் வரும்காலங்களில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இஸ்ரேலின் தற்போதைய செயல்பாடுகள் இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆதரவைக் குறைக்கும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.காசா மீது இஸ்ரேல் 18வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இது இஸ்ரேலுக்கே பேக் ஃபயராக மாறிவிடும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

கடந்த 7ம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதலை தொடுத்தது. இந்த தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிராக இஸ்ரேல் கடந்த 17 நாட்களாக காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த தாக்குதல் 18வது நாளாக இன்றும் நீடித்திருக்கிறது. இதுவரை காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2,000 குழந்தைகள் உட்பட 5,087 பேர் உயிரிழந்துள்ளனர். 15,273 பேர் படுகாயமடைந்துள்ளனர். வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை தயாராகி வருகிறது. மறுபுறம் உணவு, குடிநீர், மின்சாரமின்றி காசா மக்கள் தவித்து வருகின்றனர்.

How many people has the Hamas-Israel war killed so far? - L'Orient Today

சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட காசா எனும் துண்டு நிலத்தில் சுமார் 23 லட்சம் பாலஸ்தீன மக்கள், உயிர்வாழ மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தி வருகின்றனர். காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நான்கு நாட்களுக்கு முன்னர் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் விவாதமாக வெடித்தது. சுமார் 22 நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஆதரவாக அமெரிக்கா சில விஷயங்களை செய்தது.

அதாவது தனது ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட்’ எனும் போர்க்கப்பலை மத்திய தரைக்கடலில் காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியது. ஒருவேளை ஹமாஸுக்கு உதவ ஏதெனும் நாடுகள் முன்வந்தால் அதை இது சமாளிக்கும். ஆனால் இதில் மிகப்பெரிய ட்விஸ்ட் நடந்தது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அமெரிக்க வீதிகளில் மக்கள் இறங்கி பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் அதைவிட பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

எனவே அமெரிக்கா, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை குறைக்க அறிவுறுத்தியது. இப்படி இருக்கையில்தான் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது, “நாம் பாலஸ்தீனத்தை நல்ல முறையில் அணுக முயற்சிக்கின்றோம். ஆனால் காசாவுக்கு குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது, பாலஸ்தீனம் உடனான அணுகுமுறையை மீண்டும் கடினமாக்கும். அதேபோல உங்களுக்கான சர்வதேச ஆதரவையும் இது பலவீனப்படுத்தும். இதனால், இஸ்ரேல் வரும்காலங்களில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இஸ்ரேலின் தற்போதைய செயல்பாடுகள் இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆதரவைக் குறைக்கும்

மனித உயிரிழப்புகளை துச்சமென நினைக்கும் உங்கள் ராணுவத்தின் அணுகுமுறை, இந்த போரிலிருந்து உங்களை விரைவில் பின்வாங்க செய்துவிடும். 2021 ம் ஆண்டின் தொடக்கத்தில் அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து, இஸ்ரேல் – பாலஸ்தீனத் தலைவர்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக எந்தப் பேச்சுவார்த்தையையும் ஏற்படுத்த முயலவில்லை ” என இஸ்ரேலை எச்சரித்துள்ளார். தற்போதைய பைடன் அரசு இஸ்ரேலுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், ஒபாமா இவ்வாறு கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version