Site icon Tamil News

‘இன அழிப்பை நடத்தும் இஸ்ரேல்… அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்’- துருக்கி அதிபர் காட்டம்

இஸ்ரேல், காசாவில் இன அழிப்பை நடத்தி வருவதாகவும், இதற்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் போர், 2 மாதங்களை நெருங்க உள்ளது. இதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 5,000க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலை கண்டிக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு சர்வதேச அளவில் பல்வேறு அழுத்தங்களையும் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் செயல், அவரது அரசுக்கு மட்டுமின்றி அவரை ஆதரிக்கும் நாடுகளுக்கும் கரும் புள்ளியாக மாறி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவர்களின் இந்த மௌனத்திற்கு வரும் காலங்களில் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் அவர் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

சுமார் 2,000க்கும் மேற்பட்ட துருக்கி வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருப்பதாகவும், காசா பகுதியில் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், துவக்கம் முதலே துருக்கி அதிபர் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக தற்போது துருக்கியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version