Site icon Tamil News

முதல்முறையாக பின்னடைவை சந்தித்துள்ள இஸ்ரேல்… ஒற்றைத் தாக்குதலில் 24 வீரர்கள் பலியான சோகம்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில்லாத பின்னடைவாக, ஒற்றைத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்களை இழந்துள்ளது இஸ்ரேல்.

அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் நடத்திய கோரத்தாக்குதலை அடுத்து, காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியபோது தனது 2 நோக்கங்களை தெளிவுபடுத்தி இருந்தது. அதில் முதலாவது ஹமாஸ் அமைப்பை பூண்டோடு அழிப்பது என்றும், மற்றொன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்டவர்களை மீட்பதென்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது. ஆனால் வெளிப்படையாக இஸ்ரேல் தெரிவிக்காத இன்னொரு இலக்கு, தங்கள் தரப்பில் இழப்புகளை இல்லாமல் செய்வது அல்லது கூடுமானவரை அவற்றைக் குறைப்பது.

இஸ்ரேல் – காசா இடையிலான போர்களை ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். எதிரியை அழிப்பதைவிட தங்கள் தரப்பில் சேதாரத்தை குறைக்க வேண்டும் என்பது இஸ்ரேலில் தவிர்க்க முடியாத இலக்காக நீடிக்கிறது. அதன்படியே சாதித்தும் வந்துள்ளது. ஆனால், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தொடரும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில், முதல்முறையாக ஒற்றைத் தாக்குதலில் ஒருசேர 24 வீரர்களை இஸ்ரேல் நேற்று பலிகொடுத்தது. மேலும், இந்த துர் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று வெளியான தகவலால் இஸ்ரேல் நிலைகுலைந்திருக்கிறது.

திங்களன்று மத்திய காசாவில் உள்ள இரண்டு கட்டிடங்களை இடிப்பதற்காக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வெடிபொருட்களை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது ​​மறைவிடத்தில் இருந்து கிளர்ச்சியாளர் குழுவை சேர்ந்த ஒரு நபர் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளை வீசினார். அதன் குண்டுவெடிப்பு இஸ்ரேல் படையினர் வசமிருந்து வெடிபொருட்களின் வெடிப்பை உடனடியாக தூண்டியது, இதில் குண்டுகள் வெடித்ததோடு, கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் அதன் உள்ளிருந்த வீரர்கள் இறந்தனர். தலைமை ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செவ்வாயன்று இதனை உறுதி செய்தார்.

ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக 3 மாதங்களாக தொடரும் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கையில் இதுவரைஒற்றைத் தாக்குதலில் அதிகபட்சமாக 10 வீரர்கள் வரை இஸ்ரேல் இழந்திருக்கிறது. 24 வீரர்கள் வரை பலியானதோடு, படுகாயமடைந்த வீரர்கள் மற்றும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. இதனால் பெரும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ள இஸ்ரேல் ராணுவம், அடுத்து வரும் நாட்களில் தனது மூர்க்கமான தாக்குதலை அதிகரிக்கவோ, தொடரும் போருக்கு தற்காலிக இடைவெளி விடவோ செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version