Site icon Tamil News

சர்வதேச அழுத்தங்கள்;நாடு திரும்பும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்- வியூகத்தை மாற்றிய இஸ்ரேல்

காஸாவில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தத்தால், அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் நாடு திரும்புவதால், இஸ்ரேல் தனது தாக்குதல் வியூகங்களை மாற்ற முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர் 500க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து காஸா மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் காஸாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 21 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சர்வதேச நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஹமாஸுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி அமைப்பினருக்கு எதிராகவும், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் போர்ட் விமானம் தாங்கி கப்பல் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதியில் நிலை நிறுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது போர்ட் விமானம் தாங்கி கப்பல் உட்பட 5க்கும் மேற்பட்ட கப்பல்களை நாட்டிற்கு திரும்ப அழைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஐசன்ஹோவர் விமானம் தாங்கி கப்பல் உட்பட 5 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் செங்கடல் பகுதியில் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த தொடர் கண்காணிப்பில் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ட்ரோன்கள் மூலம் சரக்கு கப்பல் ஒன்றை தாக்கியிருந்தனர். அதனை அமெரிக்க கப்பற்படை ஹெலிகாப்டர்கள் இடைமறித்து அழித்ததோடு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சென்ற 3 படகுகளையும் அழித்தது. இதையடுத்து தரைப்படையினரை பின்வாங்க வைத்து, மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை அதிகரிக்க இஸ்ரேல் வியூகம் வகுத்து வருகிறது. இதனால் காஸாவில் மீண்டும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அச்சம் நிலவி வருகிறது.

Exit mobile version