Site icon Tamil News

இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு – செலவு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதா என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அத்துடன், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை கையளிக்குமாறு அவர் குறிப்பிட்டார்.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஊடாக நன்மை பெறும் மாணவர்களின் தொகை 2024ஆம் ஆண்டு 11 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக
வழி வகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

இதற்கமைய ஒரு மாணவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 80 ரூபாவிலிருந்து 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்காக வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும், 4 பில்லியன் ரூபாவுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version