Site icon Tamil News

இலங்கையில் வட்டிவீதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துவருகின்றது.

இந்த நிலையில், அதற்கு சமாந்தரமாக வட்டிவீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வுகூறியுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ‘பணவீக்கம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துவருகின்றது. அதனுடன் இணைந்ததாக உயர்மட்டத்தில் காணப்பட்ட வட்டிவீதங்கள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் முழுமையாக அறிவித்ததன் பின்னர், சந்தை வட்டிவீதங்கள் மேலும் விரைவாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பணவீக்கமானது இவ்வாண்டின் பின்னரைப்பகுதியில் தாம் ஏற்கனவே எதிர்வுகூறிய மட்டத்தை அடையுமெனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது வங்கிக்கட்டமைப்பின் உறுதிப்பாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், பொதுமக்களின் வைப்புக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உத்தரவாதமளித்துள்ளார்.

Exit mobile version