Tamil News

இங்கிலாந்தில் குத்திக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிச் சிறுவன்- சம்பவம் தொடர்பில் வெளியான காரணம்

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் வாளால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் அவன் எதற்காக கொலை செய்யப்பட்டான் என்னும் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 29ஆம் திகதி, ரோனன் கந்தா (16) என்ற பதின்ம வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து வாளால் குத்தப்பட்டான்.தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான்.இந்த துயர சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் அவர்களில் இருவர் விடுவிக்கப்பட்டார்கள்.

ரோனன் கந்தா, வீடியோ கேம் ஒன்றை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறான். வீட்டை அடைய சிறிது தூரமே இருந்த நிலையில், இரண்டு இளைஞர்கள் அவனை பின்னாலிருந்து நெருங்கியுள்ளார்கள்.அவர்களில் ஒருவர் தன் கையிலிருந்த வாள் ஒன்றினால் ரோனன் கந்தாவை இரண்டு முறை குத்தியிருக்கிறார். அலறித்துடித்த ரோனன் கந்தா கீழே விழ, அந்த இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்கள். இந்த காட்சிகள் அந்த பகுதியிலிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.

இங்கிலாந்தில் குத்திக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிச் சிறுவன்: காரணம் வெளியானது | Indian Origin Boy Stabbed Death In England

அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டாலும், பொலிஸார் அவர்களை இரண்டே மணி நேரத்தில் பிடித்துவிட்டார்கள்.விசாரணையில், அந்த இளைஞர்களில் ஒருவரிடம் ஒரு சிறுவன் கடன் வாங்கியிருந்ததாகவும், தவறுதலாக ரோனன் கந்தாவை அந்த சிறுவன் என நினைத்து தாங்கள் தாக்கிவிட்டதாகவும் அந்த இளைஞர்கள் கூறியுள்ளார்கள்.அதுவும், கொலை செய்வது தங்கள் நோக்கமல்ல என்றும், கடனைத் திருப்பிக் கொடுக்காததற்காக கத்தியைக் காட்டி பயமுறுத்தத்தான் தாங்கள் திட்டமிட்டதாகவும் அந்த இருவரும் கூறியுள்ளார்கள்.

ஆக, அவர்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ரோனன் கந்தா, தவறுதலாக கொலை செய்யபட்டிருக்கிறான்.இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூலை மாதம் 13ஆம் திகதி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Exit mobile version