Site icon Tamil News

பாலியல் வழக்கில் இந்திய சட்டமன்ற உறுப்பினருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்றபோது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கில் விசாரணை முடிந்ததும், நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்தது. எனினும், இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ராம்துலாருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து சோன்பத்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால், ராம்துலார் கோந்த் மக்கள் பிரதிநிதகள் சட்டப்படி எம்.ஏ.எல். பதவியை இழந்துவிட்டார்.

Exit mobile version