Site icon Tamil News

ஓய்வை அறிவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான்

இந்திய கிரிக்கெட் அணியில் தனது அறிமுக போட்டியிலேயே சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து சாதனை படைத்த பாரிந்தர் ஸ்ரண் தனது 31 வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

BCCI தன்னை முற்றிலுமாக புறக்கணித்த நிலையில் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு பாரிந்தர் ஸ்ரண் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். இடது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் தனது முதல் போட்டியிலேயே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 10 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக மொத்தமாக 24 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கிறார். 2015ஆம் ஆண்டு ஒரு போட்டியில் மட்டுமே அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின் 2016 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த சிறப்பான செயல்பாட்டின் காரணமாகவே அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

ஆனால், ஒரே ஆண்டில் அவருக்கான இந்திய அணி வாய்ப்பு முடிவுக்கு வந்தது. ஐபிஎல் தொடரில் 2019 வரை மிகச் சில போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஒட்டுமொத்தமாக 24 ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

தனக்கு ஐபிஎல் தொடரிலும் இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காததை அடுத்து தனது 31வது வயதிலேயே அவர் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

Exit mobile version