Site icon Tamil News

இந்தியா – லக்னோவில் இடிந்து விழுந்த மூன்று மாடிக் கட்டடம்; இதுவரை 8 சடலங்கள் மீட்பு!

லக்னோவில் இடிந்து விழுந்த மூன்று மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து எட்டுப் பேரின் சடலங்களை இந்திய மீட்புப் பணியாளர்கள் செப்டம்பர் 8ஆம் திகதி மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில மீட்புப் பணியாளர்கள் நிலத்தை அகழும் பெரிய இயந்திரங்களின் துணையுடன் தேடல், மீட்புப் பணியில் ஈடுபடுவதைக் காட்டும் படங்களை பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 7ஆம் திகதி பிற்பகலில் அந்த வர்த்தகக் கட்டடம் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது.பல்வேறு சிறு நிறுவனங்கள் அதில் செயல்பட்டுவந்தன. கிடங்கு, வாகனப் பழுதுபார்ப்புப் பட்டறை போன்றவையும் அவற்றில் அடங்கும்.

எட்டுப் பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் மேலும் 28 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ கூறியது.இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கியுள்ளனரா என்று தெளிவாகத் தெரியவில்லை.கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்தியாவில் பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், தொடர்ந்து மழை பெய்யும்போது பழைய, வலுவிழந்த கட்டடங்கள் இடிந்து, சேதமடைவது வழக்கம்.

லக்னோவில் இடிந்த வர்த்தகக் கட்டடத்தில் தூண் ஒன்றில் விரிசல் ஏற்பட்டதாக அங்குப் பணிபுரியும் ஊழியரான ஆகாஷ் சிங் கூறினார்.கனமழை பெய்வதால் அது மோசமடையக்கூடும் என்ற அச்சத்தில் தான் கட்டடத்தின் கீழ்த்தளத்திற்குச் சென்றதாக அவர் கூறினார்.“திடீரென்று கட்டடம் இடிந்து எங்கள்மேல் விழுந்தது,” என்று சிங் கூறியதாக பிடிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கையில் இச்சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மனமுடையச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மாண்டோரின் குடும்பத்தினர்க்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version