Site icon Tamil News

Gmail கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடில்லாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை நிரந்தரமாக டெலிட் செய்யும் முடிவை கூகுள் எடுத்துள்ளது. உங்களில் யாரேனும் உங்கள் பழைய ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல் இருந்தால், அதை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

21ம் நூற்றாண்டின் ஓர் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால் நம்மிடம் பேங்க் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ, கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் அக்கவுண்ட் அனைவரிடமும் இருக்கிறது. ஏனென்றால் பொதுவாகவே கூகுள் கொடுக்கும் அனைத்து சேவைகளும் இலவசமாக இருப்பதால், அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நீங்கள் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால் போதும் மேப்ஸ், ப்ளே ஸ்டோர், யூடியூப், குரோம் உள்ளிட்ட அனைத்தையுமே பயன்படுத்தலாம். மேலும் இந்தியாவில் அனைத்து விதமான அரசாங்க சேவைகளை பெறுவதற்கும் ஜிமெயில் பயன்படுகிறது. எனவே இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருக்கிறார்கள். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் ஒரு நபர் எத்தனை ஜிமெயில் கணக்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இதில் பலரும் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டைத் தொடங்கி அதை பலகாலம் பயன்படுத்தாமலே இருப்பார்கள். ஏன், நம்மில் பலருக்கும் ஜிமெயில் அக்கவுண்டின் பாஸ்வோர்ட் கூட மறந்து போய் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்திருப்போம்.

இவர்களுக்கெல்லாம் கூகுளின் ‘ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் பாலிசி’ அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலிசி மூலமாக கடந்த 24 மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் ஜிமெயில் கணக்கு நிரந்தரமாக டெலிட் செய்யப்படும். மேலும் அந்தக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் டிரைவ், கூகுள் காலண்டர், போட்டோஸ், யூடியூப் சேனல் போன்றவற்றின் சேவைகளும் நிரந்தரமாக நீக்கப்படும்.

இதற்கான பணிகளை வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க கூகுள் முடிவெடுத்துள்ளது. அதற்குள்ளாக நீங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தாத கூகுள் கணக்கை மீண்டும் பயன்படுத்தத் தொடங்குங்கள். உங்களால் ஜிமெயில் கணக்கை பயன்படுத்த முடியவில்லை என்றாலும் அந்தக் கணக்கு இணைக்கப்பட்டிருக்கும் யூடியூப், ப்ளே ஸ்டோர், கூகுள் டிரைவ் போன்ற ஆப்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

ஒருவேளை அந்த கணக்கு சார்ந்த எதையுமே நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் அக்கவுண்ட் நிரந்தரமாக நீக்கப்படும். எனவே வரும் டிசம்பர் மாதத்திற்குள் உங்கள் பழைய ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற முடிவை எடுத்துவிடுங்கள்.

Exit mobile version