Site icon Tamil News

இலங்கைக்கான இரண்டாவது கடன் தவணைக்கு IMF அனுமதி

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான இரண்டாவது தவணையான 337 மில்லியன் டொலர்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய சபைக் கூட்டத்தில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அது தொடர்பான உறுதிப்படுத்தல் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை முடித்துக்கொண்டு இதனை வெளியிட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மதிப்பாய்வில், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, அரசாங்க வருவாயை அதிகரிப்பது, வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிப்பது, பணவீக்கத்தைக் குறைப்பது மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் அதிகாரிகள் ஆற்றிய பணிகளை சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர்கள் குழுவினர் பாராட்டியுள்ளனர்.

அத்துடன், நாணய நிதியத்தின் முறைகளைப் பின்பற்றி அறிக்கையை (Governance diagnostic report) வெளியிட்ட முதலாவது ஆசிய நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணய நிதியின் அறிவிப்பிற்கமைய, வருட இறுதி கையிருப்பு இலக்கு 3,806 மில்லியன் டொலராகும். இந்தத் தொகையானது அசல் இலக்கான 4,431 மில்லியன் டொலரை விடக் குறைவாகும், இது இலகுவாக அடையக்கூடிய இலக்காகும்.

இந்த நிதியில் உள்ள 337 மில்லியன் டொலர்கள், நவம்பர் மாத இறுதியில் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு தொகையான 3,584 மில்லியன் டொலர்களுடன் சேர்க்கப்படும்போது, சர்வதேச நாணய நிதியம் ​​கூறிய இலக்கை எளிதில் தாண்டிவிடும் என குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version