Tamil News

இலுப்பைக்குளம் – தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள்

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (25) இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை விதித்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் இரகசியமாக முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருதாக மக்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர்.

குறித்த பகுதியில் விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்பின்னர் 09ம் திகதி காலை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டிருந்தது.

சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் குறித்த விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இச்செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் குறித்த விகாரைக்கான பணிகளை இடைநிறுத்தக்கோரி ஆளுநரினால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

Exit mobile version