Tamil News

‘தேசத்தின் பிரச்சினை பேசினால் தேச விரோதி என்கிறார்கள்’ – திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன.இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி,ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி,தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,நடிகர்கள் லொள்ளு சபா ஜீவா,இமான் அண்ணாச்சி, விஜய் விஷ்வா,சௌந்தரராஜா, சந்திரசேகரா,சிங்கப்பூர் தொழில் ஆலோசகர் ஜவஹர் அலி,படத்தின் இயக்குநர் சியோன் ராஜா, கதாநாயகன் பிரஜின்,டிஃபெண்டர் வழக்கறிஞர்கள் எம்.தாமோதரகிருஷ்ணன்,எம்.கோகுல கிருஷ்ணன், நடிப்புப் பயிற்சியாளர் ஜெயராவ்,முதலீட்டாளர்கள் விஜயராகவன், சாய் சரவணன், விவேக்,சதீஷ், தொழிலதிபர் நாமக்கல் சின்ன மருது, தமிழ்நாடு மாணவர் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சித்ரா முரளிதரன்,படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி, இசையமைப்பாளர் மாலக்கி,கலை இயக்குநர் முஜிபுர் ரகுமான் ,நிர்வாகத் தயாரிப்பாளர் வினோ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள்.

பிரபலங்கள் 30 பேர் இணைந்து வெளியிட்ட'சமூக விரோதி' டைட்டில் லுக்! |  Screen4screen

மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி பேசும் போது ,”திரைப்படத் துறையும் அரசியலும் சம்பந்தமில்லாதது போலும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்த வேண்டாம் என்றும் இங்கே சர்ச்சை முன்வைக்கப்பட்டது. திரைத்துறைக்கும் அரசியல் துறைக்கும் சம்பந்தம் உள்ளது. சினிமா ஒரு புகழ்பெற்ற ஊடகமாக வளர்ந்துள்ளது . 1973-ல் காட் பாதர் படத்தில் நடித்ததற்கு நடிகர் மார்லன் பிராண்டோ ஆஸ்கார் விருதுக்குத் தேர்வானார். அந்த விருது விழாவில் அவர் அந்த விருதை ஏற்காமல் ஒரு செவ்விந்திய பெண்ணை வைத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பேச வைத்தார். அந்தப் பூர்வீக குடிகளின் ஒடுக்குமுறை பற்றிக் கவலைப்பட்டு அந்த விருதை மறுப்பதாகத் தெரிவித்தார்.

கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும். சார்லி சாப்ளின் உலக சர்வாதிகாரி ஹிட்லரை பார்த்து உலகமே பயந்து கொண்டிருந்தபோது டிக்டேட்டர் படத்தில் அவரை நகைச்சுவைக்குரிய கேலிக்குரியவராகக் காட்டி அவர் பிம்பத்தை உடைத்தார். இப்படிக் கலைஞர்கள் சமூக மனசாட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே ரஜினி மக்கள் பிரச்சினைக்குக் குரல் கொடுக்கவில்லை என்று கேட்கும் போது அவர் பதில் தரலாம், மறுக்கலாம். அது அவர் மனசாட்சிக்கு உட்பட்டது. ஆனால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் அவர் குரல் கொடுத்து அதைத் திசை திருப்பி தன்னுடைய ரசிகர்களைத் தவறான பாதையில் செல்ல வழி வகுக்கக் கூடாது. ஸ்டெர்லைட் பிரச்சினையில் ரஜினி அப்படிச் செய்திருக்கக் கூடாது.

அவர் ஒரு பெரிய கதாநாயகனாக இருக்கிறார். படங்களில் அவர் உடுத்துகிற உடைகளை ரசிகர்கள் உடுத்துகிறார்கள். அவர் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துகிறார்கள் .அப்படிப் பின்பற்றுபவர்கள் இருக்கும்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று கூறியது எவ்வளவு தவறானது .எதற்கும் குரல் கொடுக்காதவர் அப்படிப் பேசும்போது கோபம் வரத்தான் செய்யும். அரசியலற்று இருங்கள் அமைதியாக இருங்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 15 ஆயிரம் பேரை என்கவுண்டர் மூலம் கொலை செய்த யோகி ஆதித்யநாத் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் காலில் விழும்போது, நாங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வோம். சமூக விரோதி காலில் ரஜினிகாந்த் விழும்போது அதை நாங்கள் கேள்வி கேட்போம் .சமூக விரோதியை அவர் ஆதரிப்பதாகவே எடுத்துக் கொள்வோம். நான் மூன்று ஆண்டுகள் ஐநா சபையில் உரையாற்றினேன். மீண்டும் செல்வதற்கு அங்கே அனுமதி உண்டு .ஆனால் 5 ஆண்டுகளுக்கு எனது பாஸ்போர்ட்டை முடக்கி விட்டார்கள் .

சமூகப் பிரச்சினைகளை பேசினாலே சமூக விரோதிகள் என்கிறார்கள். தேசத்தின் பிரச்சினை பேசினால் தேச விரோதி என்கிறார்கள். இங்கே எதிர் முகாம் பிரம்மாண்டமாகப் பெரும் பலத்தோடு நிற்கிறது. அப்படிப்பட்டவர்களை இது மாதிரி படங்கள் மூலம் தான் எதிர்க்க வேண்டும்.அவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அப்போது டேவிட் கோலியாத் சண்டை போல் நாம் போட வேண்டும். அதனால் தான் இந்த பட முயற்சியை ஆதரிக்கிறோம்” என்று வாழ்த்தினார்.

Exit mobile version