Site icon Tamil News

ஜப்பானில் திடீரென்று பிரிந்து சென்ற அதிவேக ரயில் பெட்டிகள்

ஜப்பானில் 320 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த Shinkansen எனும் அதிகவேக ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதன் 2 வண்டிகள் திடீரென்று பிரிந்துசென்றன.

ரயிலில் இருந்த 320 பேரில் யாரும் காயமடையவில்லை என்று NHK செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 19ஆம் திகதி காலை மியாகி பகுதியில் ஃபுருக்காவா (Furukawa) நிலையத்துக்கும் செண்டாய் (Sendai) நிலையத்துக்கும் இடையே ரயில் மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது 2 வண்டிகளையும் இணைக்கும் பகுதி கழன்றுகொண்டது. அதை அடையாளம் கண்ட ரயிலின் கட்டமைப்பு தானியக்க முறையில் ரயிலை நிறுத்தியதாக NHK குறிப்பிட்டுள்ளது.

தோக்கியோவுக்கும் ஷின்-அமோரி (Shin-Aomori)நிலையங்களுக்கும் இடையிலான சேவைகள் சுமார் 5 மணிநேரம் ரத்து செய்யப்பட்டன.

Shinkansen ரயில் வண்டிகள் அப்படிப் பிரிந்தது இதுவே முதல்முறை என்று East Japan Railway நிறுவனம் கூறியது.

ரயில் மணிக்கு 5 கிலோமீட்டருக்குக் குறைவான வேகத்தில் செல்லும்போது மட்டுமே வண்டிகள் பிரிந்து செல்லமுடியும். அவ்வகையில் ரயில் செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயிலின் செயல்முறைக்கு என்ன ஆனது என்பது விசாரிக்கப்படுவதாக அது தெரிவித்தது.

Exit mobile version