Site icon Tamil News

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை – உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

உலக அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்துக்கு பிறகு படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டு உச்சத்தைத் தொட்ட, உலகின் மிகமுக்கிய பங்குச்சந்தைகள் கூட, தற்போது சரியத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் வேலையின்மை விகிதம் 4.3% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதம் 4.1% ஆக இருந்தது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம், முதலீட்டாளர்களிடையே நிலவுவதால், உலகளாவிய சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

மேலும், அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த 12 மாதத்தில் 15 முதல் 25 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பிரபலமான முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸ் அறிவித்துள்ளது.

இதனால், இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளிலும், ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளன.

குறிப்பாக ஜப்பான் நிக்கேயி பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. 4,451.28 புள்ளிகள், அதாவது 12.4% சரிவை சந்தித்துள்ளது.

ஒரே நாளில் ஜப்பான் பங்குச்சந்தை அடைந்த மிகப்பெரிய சரிவு இது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 1987 அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு என இதனை அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த சில வாரங்களாக ஜப்பானிய பங்குகளில் உள்ள நிலைகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.

டோக்கியோ பங்குச்சந்தை குறியீடு அளித்த தரவுகளின்படி, ஜூலை இறுதி வாரத்தில் வாங்கிய பங்குகளை விட, கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் அதிக பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.

இதேபோன்று ஐரோப்பிய பங்குச்சந்தையும் 2% வரை சரிவை சந்தித்தன.

Exit mobile version