Site icon Tamil News

குற்றவாளியை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த மறுப்பு தெரிவித்துள்ள ஜேர்மனி…

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த ஜேர்மனி மறுத்துவிட்டது.

பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த அல்பேனியா நாட்டவர் ஒருவர் மீது, சுமார் 5 கிலோ கொக்கைன் கடத்தியது மற்றும் சுமார் 330,000 பவுண்டுகள் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவரது காதலி மோசமாக நோய்வாய்ப்பட்டதால் அவர் ஜேர்மனிக்குச் சென்றுவிட்டார். தற்போது அவரை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பும்படி பிரித்தானிய அதிகாரிகள் கோரியுள்ளார்கள்.ஆனால், அவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த ஜேர்மனி மறுத்துவிட்டது.

பிரித்தானிய சிறைகளின் நிலைமையை ஆய்வு செய்த அந்த அல்பேனியரின் சட்டத்தரணி, பிரித்தானிய சிறைகள் அதிக கூட்டமாக இருப்பதாகவும், அங்கு கைதிகளிடையே வன்முறை வெடிப்பதாகவும் ஜேர்மன் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளார்.

அந்த ஆதாரங்களின் அடிப்படையில், பிரித்தானிய சிறைகளின் நிலை குறித்து உறுதி செய்யுமாறு ஜேர்மன் அதிகாரிகள் பிரித்தானிய அதிகாரிகளை இரண்டு முறை கோரியுள்ளார்கள். பிரித்தானிய தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்காததால், அந்த அல்பேனியரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்துவது சாத்தியமில்லை என ஜேர்மனி தெரிவித்துவிட்டது.

இது பிரித்தானிய நீதித்துறைக்கு தலைக்குனிவு என்று கூறியுள்ளார் பிரித்தானிய சட்டத்துறையைச் சேர்ந்தவரான Jonathan Goldsmith என்பவர்.மற்றும்,அந்த அல்பேனியருக்கு எதிராக ஜேர்மனியில் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அவர் ஜேர்மனியில் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்பதால், அவர் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்படப்போவதில்லை என்பது மட்டுமல்ல, அவர் ஜேர்மன் பொலிஸ் காவலிலிருந்தும் விடுவிக்கப்படவுள்ளார்.

Exit mobile version