Site icon Tamil News

காஸாவில் முடிவுறும் தருவாயில் உணவு, தண்ணீர், மருந்து

போர் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு தேவையான உதவிகளை ஏற்றிச் செல்லும் வண்டிகள் இன்னும் எகிப்தின் ரஃபா எல்லைக்கு அருகில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்து எல்லையை இன்று திறக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ஆனால் இன்றும் ரஃபா எல்லை திறக்கப்படாது என சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் அருகிலுள்ள வீதிகள் அழிந்துள்ளதால் எகிப்து வீதிகளை சீர் செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, வரும் வார இறுதியில் எல்லை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, காஸா பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் தீர்ந்து வருவதாகவும், அவ்வாறான உதவிகளை அந்த மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், காஸாவில் உள்ள பிரதான வைத்தியசாலைக்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான எரிபொருள் இன்னும் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பல நோயாளிகள் இறக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் மற்றும் விளாடிமிர் புடினை வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை ஹமாஸுடன் பைடன் ஒப்பிட்டுப் பேசியது சர்வதேச ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை வெளியிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி காங்கிரஸிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Exit mobile version