Site icon Tamil News

காஸா எல்லையில் மலைபோலக் குவிந்திருக்கும் உணவுப்பொருள்கள்

காஸாவுக்கான உணவு விநியோகத்திற்கு உதவும்பொருட்டு ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சண்டையை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்த மறுநாள் எல்லையில் உணவுப்பொருள்கள் மலைபோலக் குவிந்தன.

விநியோகம் செய்வதற்கான அந்தப் பொருள்கள் அனைத்தும் சுட்டெரிக்கும் வெயிலில் காணப்பட்டன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் 2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் எட்டு மாதங்களாக நீடிக்கிறது.

அதன் காரணமாக காஸாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அங்கு பசி, பட்டினி ஏற்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் மன்றம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

காஸாவில் உள்ள 2.4 மில்லியன் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். மனிதாபிமான உதவிப் பொருள்களை விநியோகிக்க இயலவில்லை என்று விநியோக அமைப்புகள் கையை விரித்துவிட்டன.

பொது ஒழுங்கும் பாதுகாப்பும் சீர்குலைவது அதிகரித்து வருவதால் காஸாவில் மனிதாபிமான உதவிப் பணிகளுக்கும் அதில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐநா அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 21) கூறியது.

“சண்டை ஒருபக்கம் நீடிக்கும் அதேவேளை குற்ற நடவடிக்கைகளும் திருட்டு, கொள்ளை போன்றவையும் முக்கியமான பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு இடையூறாக உள்ளன,” என்றும் அந்த அலுவலகம் தெரிவித்தது.

ஆனால், உதவிப்பொருள் விநியோகத்தை தான் அனுமதித்து உள்ளதாகவும் விநியோகத்தை வேகமாகச் செய்யுமாறு அமைப்புகளைக் கேட்டுக்கொண்டு உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

தென் காஸாவில் உதவிப்பொருள்களைத் தாங்கிய நூற்றுக்கணக்கான லாரிகள் அனுமதிக்கப்பட்டு உள்ள வேளையில் பொருள்கள் தேக்கம் அடைந்திருப்பது ஏன் என்று கேட்டு ஐநாவை இஸ்ரேல் சாடியுள்ளது.

காஸாவின் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் கொள்கலன்கள் வரிசையாக நிற்பதையும் ஏராளமான லாரிகள் அங்கு உதவிப்பொருள்களைக் கொண்டு வந்து குவிப்பதையும் வானில் இருந்து இஸ்ரேல் புகைப்படம் எடுத்து அவற்றைப் பகிர்ந்துகொண்டு உள்ளது.

Exit mobile version