Tamil News

திருகோணமலையில் பட்டப்படிப்பை தொடர மாணவர்களுக்கு நிதியுதவி!

திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகி பட்டப் படிப்பை தொடர பண வசதி இல்லாத தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று (14) நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தினால் மாவட்ட கிளை அலுவலகத்தில் 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்துக்கான நிதியுதவி திருகோணமலை மாவட்ட
நலன்புரி சங்கத் தலைவர் எஸ்.குகதாஸனினால் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 65 மாணவ, மாணவிகளுக்கு இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி பண வசதி இன்மையால் பட்டப் படிப்பை தொடர முடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கும், தந்தையை இழந்து கல்வியை தொடர முடியாத நிலைமையில் எதிர்காலத்தில் நாட்டிற்காக சமூக நோக்குடன் போராடக்கூடிய இளைஞர் யுவதிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சிறந்த கல்வியைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் இன்னும் கல்வி மான்களை உருவாக்க வேண்டும் எனவும் அதற்காகவே பல்கலைக்கழக மாணவ மாணவிகளை தெரிவு செய்துள்ளோம் எனவும் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.குகதாஸன் இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நலன்புரி சங்கத் தலைவர் எஸ்.குகதாசன், துணைத் தலைவர் டொக்டர் என். சரவணபவன், பொருளாளர் திரு. இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் இதற்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இதற்கான நிதி உதவியைக் கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version