Site icon Tamil News

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றுடன்  (25.11) நிறைவடைந்துள்ளது.

ஆறாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின்போது,   ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. நேற்றைய தினத்துடன் 35 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளதோடு கையில் அணியப்படும் இலக்கத்தகடு ஒன்றும், மணிக்கூட்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

ஸ்கானர் இயந்திரம் மூலம் குறித்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என கடந்த இரண்டு தினங்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் நேற்றையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதன் தெளிவான முடிவுகளை நாளையதினமே (27.11) பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ கடந்த தினங்களில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்   இன்றையதினம் (26.11) அகழ்வு பணி இடம்பெறாது எனவும்,  விடுமுறை வழங்கப்பட்டு நாளையதினம் ஏழாவது நாளாக அகழ்வு பணி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version