Site icon Tamil News

பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து – திணறும் இலங்கை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 118 ரன்களும், பென் டக்கெட் 40 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிலன் ரத்நாயகே மற்றும் லகிரு குமாரா தலா 2 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. அந்த அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிஷான் மதுஷ்கா (7 ரன்கள்), திமுத் கருணாரத்னே (7 ரன்கள்), பதும் நிசங்கா (12 ரன்கள்), ஏஞ்சலோ மேத்யூஸ் (22 ரன்கள்), தனஞ்ஜெயா டி சில்வா (0 ரன்), தினேஷ் சண்டிமால் (23 ரன்கள்) என இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து கமிந்து மெண்டிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஆலி ஸ்டோன் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். கஸ் அட்கின்சன் மற்றும் சோயப் பஷீர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 250-க்கும் அதிகமான ரன்கள் பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version