Site icon Tamil News

‘ஒன்றும் புரியவில்லை’ – அதிபர் பைடனின் உரையை விமர்சனம் செய்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியது குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதனை முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்தது. “பைடனின் உரையில் பெரிதாக ஒன்றும் புரியவில்லை. சிலவற்றை தான் புரிந்துகொள்ள முடிந்தது. அது மிகவும் மோசமாக இருந்தது. பைடனும், கமலா ஹாரிஸும் அமெரிக்காவுக்கு சங்கடம் தருகின்றனர். இது போல ஒரு போதும் இருந்ததில்லை” என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காது பகுதியில் காயம் அடைந்தார். தொடர்ந்து அதிபர் தேர்தலில் அவருக்கான ஆதரவு அதிகரித்தது. அதோடு குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.

இந்த சூழலில் கடந்த 21ம் திகதி அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்தார். அதோடு துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை பைடன் வழங்கி இருந்தார்.

அப்போதே பைடனை கடுமையாக விமர்சித்திருந்தார் ட்ரம்ப். மேலும், கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிட்டால் எளிதில் வீழத்துவேன் என்றும் சொல்லி இருந்தார். இந்தச் சூழலில் தான் அதிபர் பைடனின் உரையை அவர் விமர்சித்துள்ளார்.

Exit mobile version