Site icon Tamil News

இலங்கை” “அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்” சஜித் மற்றும் அனுரவிடம் ரணில் வலியுறுத்தல்

இலங்கைக்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழப்பமான மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமா என்பதை இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டை விட தற்போதைய பொருட்களின் விலைகள் குறைவாக இருப்பதால், நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லும் நோக்கில் அரசாங்கம் ஏற்கனவே ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்க இதுவரை எட்டப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை பேணப்படும் என அவர் உறுதியளித்தார். .

பொலன்னறுவையில் இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற “புலுவன் ஸ்ரீலங்கா” பேரணியின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது உரையில், அபிவிருத்தியடைந்த நாடாக முன்னேறுவதற்கு, இலங்கை தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எவ்வாறாயினும், சஜித் மற்றும் அநுர ஆகியோர் வரிக் குறைப்பு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதாக விமர்சித்த அவர், முன்னைய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த அதே தவறுகளையே அவர்கள் மீண்டும் செய்வதாக எச்சரித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வரிக் குறைப்பினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை பார்வையாளர்களுக்கு நினைவூட்டிய அவர், அந்தப் பாடத்தை மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னர், வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி விக்ரமசிங்க, திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிபதி வணக்கத்திற்குரிய திம்புலாகல ராகுலலங்கார நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

திம்புலாகல ரஜமஹா விகாரையில், திம்புலாகல சேனாசனாதிபதி தேரர் செத்பிரித் ஓதி ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேரர்களுடன் ஜனாதிபதி அவர்கள் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் இரண்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மீளாய்வு செய்தனர்.

Exit mobile version