Tamil News

ப்ளூ டூத் உதவியுடன் சுங்கத்துறை தேர்வு… 28 வடமாநில இளைஞர்கள் கைது!

சென்னையில் சுங்கத்துறை தேர்வை `ப்ளூடூத்’ உதவியுடன் மோசடியாக எழுதிய ஹரியாணாவைச் சேர்ந்த 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்ட்டீன் உதவியாளர், ஓட்டுநர் என 17 காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு, நேற்று நடத்தப்பட்டது. 1,600 பேர் நேற்று இந்த தேர்வை எழுதினர்.

இந்நிலையில், தேர்வில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள், ப்ளூ டூத், ஹெட்செட்டுகளைப் பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள் மோசடியாக தேர்வு எழுதியது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பலரிடம் காவல்துறை மற்றும் சுங்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், 28 பேர் முறைகேடாக தேர்வு எழுதியது தெரியவந்தது.அவர்கள் காது மற்றும் வயிற்றுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த ப்ளூ டூத் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 28 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

போலீஸாரிடம் பிடிபட்டவர்

ரயிலில் வந்த போது ஹரியாணாவைச் சேர்ந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் கொடுத்த ஐடியாவின் பேரில் இந்த மோசடியை அரங்கேற்றியதாக தெரிவித்தனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் 10 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி தேர்வை எழுதி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர். கைதான நபரின் உண்மையான பெயர் துளசியாதவ் என தெரியவந்துள்ளது.அவர் மீது ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version