Tamil News

சுற்றுக்காவல் விமானப் பாதையில் தீப்பொறிகளைக் கக்கிய சீன விமானங்கள்; பிலிப்பீன்ஸ் கடும் கண்டனம்

பிலிப்பீன்சின் சுற்றுக்காவல் விமானப் பாதையில் சீனாவின் விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் தீப்பொறிகள் பறக்கும் வகையில் அபாயகரமாக பறந்த சம்பவம் தென்சீனக் கடலில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய ஷோல் பகுதிக்கு மேல் உள்ள பிலிப்பீன்ஸ் விமானப்படையின் சுற்றுக்காவல் விமானப் பாதையில், சீன விமானப்படை விமானங்கள் தீப்பொறிகளைக் கக்கியவாறு அபாயகரமான முறையில் பறந்ததால், சீனாவுக்கு அரசதந்திர ரீதியிலான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக பிலிப்பீன்ஸ் அரசு, செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பிலிப்பீன்ஸ் ராணுவத் தலைவர் ஜெனரல் ரோமியோ பிராவ்னர் ஜூனியர், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சீனாவின் இந்தப் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சீனாவின் இதுபோன்ற ஆபத்தான நடவடிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீன விமானங்களில் இருந்து வெளிவந்த தீப்பொறிகள், பிலிப்பீன்ஸ் சுற்றுக்காவல் விமானத்தில் பட்டிருந்தால் விமானம் வெடித்துச் சிதறியிருக்க நேரிடும் என்று பிராவ்னர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிலிப்பீன்ஸ் ராணுவத் தலைவர் ஜெனரல் ரோமியோ பிராவ்னர்.

இதுகுறித்துப் பேசிய பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர், சீனா இதுபோன்ற ஆபத்தான நடவடிக்கைகளை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த வார இறுதியில் நடந்த சீன விமானப்படையின் அந்த நடவடிக்கை நியாயமற்ற, சட்ட விரோத, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செயல் என்று அவர் கூறினார்.

இதுபோன்ற சம்பவங்கள் பிலிப்பீன்ஸ் ராணுவம் மற்றும் மக்களுக்கு கடற்பகுதியில், வான்பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும். எனவே, வட்டார அமைதியைக் குலைக்கும் வகையிலான ஆத்திரமூட்டும் செயல்களை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீன அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் பிலிப்பீன்ஸ், சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியின் வான்வழிப் பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்று பிலிப்பீன்ஸ் கடல்துறை கண்காணிப்புக் குழுவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Exit mobile version