Site icon Tamil News

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் சிறைக் காலம் பாதியாகக் குறைப்பு

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சிறைத்தண்டனையை 6 ஆண்டுகளாக பாதியாக குறைத்துள்ளதாக மலேசிய மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

பல பில்லியன் டாலர் 1எம்டிபி நிதி ஊழலில் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றங்களுக்காக நஜிப் ரசாக் 2022 இல் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

“கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பரிசீலித்த பிறகு… நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தில் 50 சதவிகிதம் குறைக்க மன்னிப்பு வாரியம் முடிவு செய்துள்ளது” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா தலைமையில், அட்டர்னி ஜெனரலையும் உள்ளடக்கிய வாரியம், கூடியது.

வாரியம் தனது முடிவுக்கு வேறு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

நஜிப் ரசாக் 2028 இல் விடுவிக்கப்படுவார் என்றும், அவரது அபராதம் 50 மில்லியன் ரிங்கிட்டாக ($10.6 மில்லியன்) குறைக்கப்படும் என்றும் அது கூறியது.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.

நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கருத்து கேட்க முடியவில்லை.

Exit mobile version