Tamil News

கோவையில் விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள மரணம்…!

கோவை விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரு குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி

கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது. இங்கு 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் குடும்பங்கள் அனைவரும் விமானப்படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள்.இந்நிலையில் இங்கு குடியிருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியானஸ் ரெட்டி (4) மற்றும் பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா ஆகியோர் அங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் விளையாடச் சென்றுள்ளனர்.

இதில் சறுக்கு விளையாட்டு விளையாடும் பகுதிக்குச் சென்ற குழந்தைகள் இருவரும் சறுக்கு விளையாட முயன்ற போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்சார தாக்குதலுக்கு உண்டான இரு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக காப்பாற்றி ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிரிழந்த குடியிருப்பு பூங்கா

ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அங்கிருந்த மின்சார வயர்கள் சேதப்பட்டு இருப்பது அங்கு வேலை செய்யும் சிவா என்ற எலக்ட்ரீஷனுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் குடியிருப்பின் தலைவர் என்எல் நாராயணன் கண்டு கொள்ளாததால் அந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version