Site icon Tamil News

பும்ரா முதுகில் குத்திய பிசிசிஐ…. சைலன்ட்டாக ஆப்பு வைத்த கம்பீர்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கு முன்பு வரை இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா இருந்து வந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்பு ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

அப்போது முதல் பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது கூட பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

ஆனால், தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் பும்ரா தான் துணை கேப்டன் என அறிவிக்கப்படவில்லை.

இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்த போது கவுதம் கம்பீர் தான் இதற்கு காரணம் என சுட்டிக் காட்டுகிறார்கள்.

முன்னதாக இந்திய டி20 அணி மற்றும் ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில்லை அறிவித்து இருந்தது பிசிசிஐ.

அவரை விட மூத்த வீரர்கள் பலரும் அணியில் இருந்த போதும் சுப்மன் கில் இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

டி20 போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பாக ஆடாத நிலையிலும் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது பல்வேறு கேள்விகள் எழக் காரணமாக இருந்தது.

ஆனால், அப்போது வருங்கால கேப்டனாக சுப்மன் கில்லை வளர்ப்பதற்காக அவருக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

கவுதம் கம்பீர் அடுத்த தலைமுறை இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக சுப்மன் கில்லை வளர்த்து எடுத்து கேப்டன் ஆக்க முடிவு செய்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

அப்போதே டெஸ்ட் அணிக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

அதே சமயம் பும்ராவின் துணை கேப்டன் பதவி பறிக்கப்படுமா? என்ற சந்தேகமும் இருந்தது.

அதேபோல தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு துணை கேப்டன் என யாரும் அறிவிக்கப்படவில்லை.

இதன் மூலம் பும்ராவின் முக்கியத்துவத்தை பிசிசிஐ குறைத்து இருக்கிறது. உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார் பும்ரா.

மேலும் இந்திய அணியின் பந்துவீச்சு திட்டங்களை தயார் செய்வதிலும் அதை சக பந்துவீச்சாளர்கள் செயல்படுத்துவதிலும் அவரது பங்கு உள்ளது.

மறுபுறம் சுப்மன் கில் டி20 அணியிலும், டெஸ்ட் அணியிலும் சுமாராக ஆடும் வீரராகவே இருக்கிறார்.  அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 35 மட்டுமே.

25 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பின்னரும் மோசமான பேட்டிங் சராசரி வைத்துள்ள சுப்மன் கில்லுக்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது சுப்மன் கில் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அடுத்து வரும் தொடர்களில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

Exit mobile version