Site icon Tamil News

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களான ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு சிறை தண்டனை

ஹிந்துஜா குழும குடும்பத்தினர் நால்வருக்கு 4 முதல் நான்கரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பணியாளா்களை சித்திரவதை செய்த வழக்கில், குறித்த நால்வருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஜா குழுமம் என்பது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள மிகப்பெரிய வணிக குழுமம் ஆகும். இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க், ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது.

ஆட்டோமொபைல், வங்கி, கணினி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் ஹிந்துஜா குழுமம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனங்களில் பல்லாயிரம் பேர் பணியாற்றுகின்றனர். 37க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. ஹிந்துஜா குடும்ப உறுப்பினர்களான 78 வயதான பிரகாஷ் மற்றும் அவரது 75 வயதான மனைவி கமால், அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்கள்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆடம்பர மாளிகை உள்ளது. இந்த மாளிகையில் பணியாற்றிய இந்திய பணியாளா்களை பிரகாஷ், அவரின் மனைவி கமால், மகன் அஜய், மருமகள் நம்ரதா ஆகிய நாலவரும் கொத்தடிமை போல நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவர்கள் அந்தப் பணியாளா்களின் பாஸ்போா்ட்டையும் பறிமுதல் செய்ததுடன், அவா்களுக்கு சுவிட்சா்லாந்து கரன்சியில் ஊதியம் வழங்காமல், இந்திய ரூபாயில் மிகக் குறைந்த ஊதியம் வழங்கி, ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை பணியாற்ற கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பான வழக்கு ஜெனீவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அவா்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்த நீதிமன்றம், பிரகாஷ் மற்றும் அவரின் மனைவிக்கு நான்கரை ஆண்டுகளும், மகன் அஜய் மற்றும் அவரது மனைவிக்கு 4 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Exit mobile version