Site icon Tamil News

தடுமாறிய பைடன்: புட்டின் என ஸெலென்ஸ்கி, டிரம்ப் என கமலா ஹாரிஸை தவறாக உச்சரிப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தமது துணை அதிபர் கமலா ஹாரிசை, டோனல்ட் டிரம்ப் என்று மாற்றிச் சொன்னார்.

81 வயது பைடன், இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு உகந்த உடல்நிலையில் இருக்கிறாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. தாம் தகுதியானவரே என்பதை அவர் செய்தியாளர் கூட்டத்தில் நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளையில் இவ்வாறு நிகழ்ந்தது.

“இதோ பாருங்கள், துணை அதிபர் டிரம்ப்புக்கு அதிபராகும் தகுதியில்லாதிருந்தால் நான் அவரைத் துணை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கமாட்டேன். அதிலிருந்து தொடங்குவோம்,” என்று கமலா ஹாரிசுக்குப் பதில் தம்மை எதிர்த்துப் போட்டியிடவுள்ள குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரை பைடன் சொன்னார்.ஹழரிஸ் மீதான நம்பிக்கை குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

பைடனின் அந்த பதிலை டிரம்ப், தமக்குச் சொந்தமான ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் உடனடியாகக் கிண்டலாகப் பேசித் தீர்த்தார்.

இதற்கு சில மணிநேரத்துக்கு முன்பும் திரு பைடன், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை, ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எனத் தவறாகக் குறிப்பிட்டார்.“இப்பொழுது, எவ்வளவு மனவுறுதி இருக்கிறதோ அதே அளவு தைரியமும் உள்ள உக்ரேனிய அதிபரிடம் அவையை ஒப்படைக்கிறேன். மாண்புமிகு பெண்களே, ஆண்களே, அதிபர் புட்டின்,” என்று அமெரிக்க தலைநகர் வா‌ஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ கூட்டத்தில் பைடன் அறிவித்தார். அறையில் இருந்தவர்கள் ஆச்சரியத்துக்கு ஆளாயினர்.

சுமார் இரண்டு விநாடிகளுக்குப் பிறகு தாம் செய்த தவற்றைத் திருத்திக்கொள்ள முயற்சி செய்த பைடன், “அதிபர் புட்டின், நீங்கள் அதிபர் புட்டினை வெல்லப்போகிறீர்கள், அதிபர் ஸெலென்ஸ்கி. புட்டினை வெல்வதில் நான் மிகுந்த கவனம் கொண்டுள்ளேன்,” என்றார்.பைடன் வாய் தவறி மேற்கொண்ட அறிவிப்புக்குப் பதிலளித்த ஸெலென்ஸ்கி, “நான் அவரைவிட (புட்டின்) சிறந்தவர்,” என்று கூறினார்.

அதற்கு பைடன், “நீங்கள் அவரைவிட மிகச் சிறந்தவர்,” என்று கூறுகையில் அறையில் இருந்த சிலர் சிரித்தனர். பிறகு ஸெலென்ஸ் தமது உரையை ஆற்றினார்.

வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடவோ மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவை வழிநடத்தவோ பைடன் தகுதியானவரா என்ற அச்சம் அவரின் ஆதரவாளர்கள், சக ஜனநாயகக் கட்சியினர் உள்ளிட்டோரிடையே நிலவி வருகிறது.

Exit mobile version