Tamil News

பிசியான நேரத்திலும் கமல் எடுத்துள்ள புதிய முயற்சி! கைகோர்க்கும் இயக்குனர்

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் அதிக பிஸியாக தனது படபிடிப்பு வேலைகளில் ஈடுபடுமொருவர்.

இவர் சினிமாவில் மட்டும் அன்றி அரசியலிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர், இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233 ஆவது படத்தை நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Did you know? Kamal Haasan's 'Nayakan' was Vetrimaaran's inspiration to ...

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே… கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில், இயக்குனர் எச்.வினோத் இணைந்துள்ளாரா? என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது..

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு விவசாயிகளுடன் துணை நிற்பேன் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தது மட்டும் இன்றி விவசாயிகளையும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இயக்குனர் எச்.வினோத்தும் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பு குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “நாம் மறந்து போன, நம்மை விட்டு மறைந்து போன, நமது பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை மீட்டெடுப்பதில் ஒரு போராளியாக செயல்பட்டவர் நெல் ஜெயராமன். ஓர் தனி மனித இயக்கமாக அவர் மறு கண்டுபிடிப்பு செய்து தந்தவை சுமார் 174 நெல் ரகங்கள்.

தனக்குப் பின்னரும் இந்த பேரியக்கம் தொடர்வதற்கான விதைகளை அவர் ஊன்றி சென்றிருக்கிறார்.

அதன் சாட்சியாக நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அவரது வழியில் தொண்டர்களும், மாணவர்களும், ஜெயராமன் இயற்றிய நெருப்பை அணையாமல் பாதுகாத்து வருகிறார்கள்.


பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பாதுகாத்து மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண்மை துறைக்கும், வேளாண்மையை பயில்கிறவர்களுக்கும், பயிற்சி விற்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலை இல்லாமல் அளித்து வருகிறது இந்த இயக்கம்.

இந்த அமைப்பின் நிர்வாகிகள், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களை இன்று நேரில் சந்தித்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய கமலஹாசன், திருத்தி எழுதப்பட்ட புனை வரலாற்றில் இருந்து, நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுப்பது தான் இன்றைய அரசியல். தமிழர்களின் மரபிலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும், நமது வேளாண்மைக்கும்… உணவு பழக்கத்திற்கும் மறுக்க முடியாத இடம் உண்டு.

வரலாற்றை மீட்டெடுப்பது போலவே நமது பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர் நிலைகளையும், மீட்டெடுத்தே ஆக வேண்டும்.

ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இதுவும் எனது கடமை என்றே நினைக்கிறேன்.

கைவிடப்பட்ட ஊர் கிணறுகளை மீட்டெடுக்கும் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். உடனடியாக எனது ஆதரவையும் பங்களிப்பையும் அவர்களுக்கு நல்கினேன்.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கவும் பரவலாக்கம் செய்வதற்கும், நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் முக்கியமானவை.

என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன் என தெரிவித்தார்.

இயற்கை விவசாயம் தற்சார்பு பொருளாதாரம், மரபு வேளாண்மை, சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நாட்டினங்கள் பராமரிப்பு ,நீர்நிலைகள் மீட்டெடுப்பு, கிராம மேம்பாடு உள்ளிட்டவை மக்கள் நீதி மய்யம் அக்கறை கொள்பவை.

இவற்றில் எங்கள் பங்களிப்பு என்றென்றும் தொடரும். வருகிற ஜூன் மாதம் 17, 18, ஆகிய தேதிகளில் இவைகள் நடத்தும் தேசிய நெல் திருவிழா 2023 நிகழ்வில் தமிழ் நிலத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும்.

பாரம்பரியத்தை பாதுகாக்கும் இந்த இளைஞர்களின் முயற்சிக்கு சமூகம் துணை நிற்க வேண்டும் என்று கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது கமல்ஹாசனுடன் திரைப்பட இயக்குனர்கள் எச். வினோத் மற்றும் ரா. சணவணன் ஆகியோர் இருந்தனர்.

மேலும்மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, உயர் மட்ட குழு தலைவர் பந்தநல்லூர் அசோகன், உயர்மட்ட குழு உறுப்பினர் நல்லினம் உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவர்களுடன் இருப்பதற்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளும் இருந்தனர்.

Exit mobile version