Site icon Tamil News

மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் – இளைஞன் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடாத்தியதில் 4 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது தாயார், சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் மதுபோதையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (05) மாலை 6 மணிக்கு அந்த பகுதி வீதியில் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ள நிலையில் அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துகொண்டார்.இதனையடுத்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார், சகோதரி தமது தோல்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பொலிஸ் சாஜன் ஒருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்த நிலையில் குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலிஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிசார் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூண்டின் வெளிபகுதில் வைத்துள்ளனர்.இதன்போது குறித்த இளைஞன் தனது தலையை கூண்டின் கதவில் அடித்ததையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டுள்ளார். அவரை வாயால் கடித்து அவரது சீருடையை கிழித்த இளைஞன், அவரை காப்பாற்ற சென்ற இரு பொலிசார் மீது இளைஞனுடன் அவரது தாயார் சகோதரிகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

பின்னர், இளைஞன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவத்தில் இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.இதேவேளை, கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version