Site icon Tamil News

ராஜபக்ஷக்களின் இலங்கை குடியுரிமைகளை இரத்துச் செய்யுமாறு அழுத்தம்

இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பிரதிபலித்து நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கிய பொருளாதாரக் கொலையாளிகளை அம்பலப்படுத்தி,வரலாற்றுத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்தாலும், இத்தரப்பினர் இன்னமும் அரச அனுசரணையின் கீழ் சலுகைகளை அனுபவித்து தங்கள் வழமையான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச,பசில் ராஜபக்ச, பி. பி.ஜயசுந்தர,அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, டபிள்யூ.டி.லக்ஷ்மன், சமந்த குமாரசிங்க மற்றும் நிதிச் சபை இணைந்து இந்த வங்குரோத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இந்தத் தீர்ப்பின் பிரகாரம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட நபர்களுக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடவும், குறித்த நபர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை உடனடியாக நியமித்து,இந்த பொருளாதாரக் கொலைகாரர்களின் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கருத்துக்கு ஆளும் தரப்பு உறுப்பினர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, எதிர்க்கட்சித் தலைவரின் ஒலிவாங்கியை 4 முறை துண்டித்து ஆளுங்கட்சியின் எம்.பி.க்கள் இடையூறு செய்து பேச்சு நடத்த சபாநாயகர் வாய்ப்பளித்தார்.

பாராளுமன்ற கேலரியில் பாடசாலை மாணவர்கள் இருந்த போதும் எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு விளைவித்து, ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் சபா பீடத்திற்கு குறுக்காக எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைக்கு அருகாமையில் வந்தும் தொடர்ச்சியாக இடையூறு விளைவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் கையிலிருந்த கேள்விப்பத்திரத்தை ஆளும் கட்சி உறுப்பினர் சனத் நிஷாந்த பிடுங்கி எடுத்து, பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமரவிக்ரமவிடம் கொடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பிரதமர் கூட பார்த்துக்கொண்டிருக்கும் போது இது நடந்தது என்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Exit mobile version