Site icon Tamil News

600 பணியாளர்கள் அதிரடியாக நீக்கிய ஆப்பிள் நிறுவனம்

பிரபல ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் திட்டங்களை ரத்து செய்ததை அடுத்து, பணியாளர்களில் 600 பேரை அதிரடியாக நீக்கம் செய்து அதிர்ச்சி தந்துள்ளது.

உலகின் தலைசிறந்த டெக் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். இது மொபைல் போன், வாட்ச் உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட் என்ற முன்னொட்டு சேர்வதற்கு அர்த்தம் ஊட்டிய நிறுவனமாகும். இன்றுவரை அதன் ஐபோன், ஐமேக் தயாரிப்புகள் முன்னணி விற்பனையில் உள்ளன. பொறியியல் படிப்பை முடித்தவர்களில் கனவுகளில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுவதும் இருக்கும். அதற்கு ஏற்ப பணியாளர்களை கவுரவிப்பதிலும் ஆப்பிள் நிறுவனம் தனித்துவத்தை நிரூபித்து வந்திருக்கிறது.

இத்தகைய பின்புலமிக்க ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பது டெக் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளே திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவுகளின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கத்தை கையிலெடுத்துள்ளது. கலிபோர்னியா மாகாண வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறையிடம் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்த தரவுகளில் இருந்து இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத இறுதியில், ஆப்பிள் நிறுவனம் தனது இரு முன்னோடி முயற்சிகளையும் நிறுத்தத் தொடங்கியது. இது நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை மேம்படுத்த அல்லது கணிசமான புதிய துறை முயற்சிகளில் நுழைவதற்கான முயற்சிகளாக அறியப்பட்டன. டெஸ்லாவுக்கு போட்டியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் கார் திட்டம், அதன் அதிகரிக்கும் முதலீடு குறித்தான கவலைகளால் முடங்கியது. பொறியியல் சவால்கள், சப்ளையர்களின் ஒத்துழையாமை மற்றும் செலவின கவலைகள் ஆகியவை மேம்பட்ட ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளே திட்டத்தை மூடச் செய்தது.

இதன்படி கார் திட்டத்தின் கீழான ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 371 பேர் இந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியா தலைமை அலுவலகத்துக்கு அப்பால் பல சாட்டிலைட் அலுவலங்களில் ஏனைய ஆட்குறைப்புகள் அரங்கேறின. மேலும் கணிசமான நிரவல்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாடிக்ஸ் சார்ந்த துறைகளுக்கு ஊழியர்களை திருப்பின. 2 திட்டங்களை நிறுத்தியதன் பின்னணியில் ஆப்பிள் நிறுவனம் கையில் எடுத்திருக்கும் புதிய திட்டங்கள் குறித்தான தகவல்கள் இன்னமும் வெளியே கசியவில்லை. மெட்டாவெர்ஸ் மற்றும் இதர செயற்கை நுண்ணறிவு சார்ந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக அவை இருக்கும் என்ற கணிப்புகள் மட்டும் தற்போதைக்கு வலம் வருகின்றன.

Exit mobile version