Tamil News

மீண்டும் நிலச்சரிவு: இமாச்சல்- உத்தராகண்டில் 60 பேர் பலி

கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்துவருவதாலும், அடுத்தடுத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட், இமாச்சலில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே வட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்தது.

மழை வெள்ளம், நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது விழுந்த சம்பவம், மின்சாரம் பாய்ந்த சம்பவங்கள், மின்னல் தாக்கிய சம்பவங்கள் என வட மாநிலங்களில் உயிர் பலிகள் ஏற்பட்டன.

இமயமலையில் அமைந்துள்ள மாநிலங்களான இமாச்சலப் பிரதேசமும், உத்தராகண்ட் மாநிலமும் பருவமழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாண்டி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் சம்மர் ஹில் பகுதியில் நேற்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 21 பேர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களில் பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு இமாச்சலப் பிரதேசத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. உத்தராகண்ட் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

 

Exit mobile version