Site icon Tamil News

மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம்… பொலிஸார் அழுத்தியதில் மூச்சுத் திணறி கறுப்பினத்தவர் பலி!

அமெரிக்காவில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்ய முயன்றபோது கீழே தள்ளி அழுத்தியதில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் கடந்த 18ம் திகதி கார் ஒன்று அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதியது. இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார் இந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது விபத்தை ஏற்படுத்தியவர் அருகில் உள்ள பாருக்குள் ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் அந்த பாருக்குள் சென்று, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான, கறுப்பினத்தை சேர்ந்த ஃபிராங்க் டைசன் (53) என்பவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் அவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பொலிஸார், ஃபிராங்க் டைசனை கீழே தள்ளி அவரது கைகளை பின்புறமாக வைத்து விலங்கு பூட்ட முயன்றனர். அப்போது, பொலிஸாரின் பலவந்தமாக அழுத்தியதில் ஃபிராங்க் டைசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தனக்கு மூச்சுத் திணறுவதாகவும், தன்னால் சுவாசிக்க இயலவில்லை என்றும் அவர் பொலிஸாரிடம் தொடர்ந்து சொல்லி இருக்கிறார்.

பொலிஸார் விடாமல் அழுத்தியதில் அவர் மூர்ச்சையானார். இந்நிலையில், சிறிது நேரத்தில் அவர் நிலைகுலைந்ததும், அவருக்கு நாடித்துடிப்பு உள்ளதா என பொலிஸார் பரிசோதித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஃபிராங் டைசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஃபிராங் டைசனை கைது செய்ய முயன்றபோது பொலிஸார் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகள் மூலம் இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. கறுப்பினத்தவரான ஃபிராங்க் டைசன், பொலிஸாரிடம் மூச்சுவிடமுடியவில்லை என கெஞ்சியும், விடாமல் அழுத்தி அவர் கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவில், பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2020ம் ஆண்டு மே மாதம், ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர், வெள்ளை பொலிஸ் அதிகாரியால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version