Tamil News

ரத்த நாளம் சிக்காத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பித்த அமெரிக்க சீரியல் கில்லர்!!

விஷ ஊசி செலுத்த ரத்த நாளம் சிக்காததால், கொலைக் குற்றவாளி ஒருவர் அமெரிக்க அரசின் மரண தண்டனையிலிருந்து தற்காலிகமாக தப்பியிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு ட்ரிப்ஸ் மருந்து ஏற்றுவதற்காக, அவரது கரத்தில் உகந்த ரத்த நாளத்தை தேடுவதில் தடுமாறும் செவிலியர்களை பார்த்திருப்போம். இதயத்திற்கு ரத்தத்தை ஏந்திச் செல்லும் சிரை நாளத்தில் மருந்து ஏற்றுவதற்கான மருத்துவமனை முயற்சிகள், தடுமாற்றத்துடன் நடந்தேறுவது சாதாரணமான ஒன்று. அமெரிக்காவில் இதே பாணியில் கொலைக்குற்றவாளி ஒருவருக்கு ரத்த நாளத்தை கண்டறிவதில் தடுமாற்றம் நேரிட்டதால், மரண தண்டனை அதன் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

73 வயதாகும் தாமஸ் க்ரீச் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஆவார். இடாஹோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நேற்றைய தினம் அரங்கேறின. ஆனால் உகந்த ரத்த நாளத்தை கண்டறிவதில் தடுமாற்றம் எழுந்தது. அதற்காக சுமார் 8 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததில், மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சீரியல் கில்லரான தாமஸ் க்ரீச், தனது 73 வயதில் மேலும் சில காலம் சிறையில் வாழ அதிர்ஷ்டவசமாக ஆயுள் நீட்டிப்பு பெற்றிருக்கிறார்.

தாமஸ் க்ரீச்

5 கொடூரக் கொலைகளை செய்ததாக கைதான தாமஸ் க்ரீச், சிறையில் வைத்து தனது அறை நண்பனை அடித்தே கொன்றதில் அந்த எண்ணிக்கையில் மேலும் ஒன்றை உயர்த்தினார். இந்த வழக்குகளில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இவர், தண்டனை நிறைவேற்றப்படும் நடைமுறைக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார். அமெரிக்காவில் மரண தண்டனை சாதாரணம் என்ற போதும், கடந்த 12 ஆண்டுகளில் இடாஹோ மாகாணத்தில் மரண தண்டனைக்கு முன்னகர்த்தப்பட்ட முதல் நபராக தாமஸ் க்ரீச் உள்ளார்.

இதர மரண தண்டனை நடைமுறைகள் பொதுவெளியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவதன் மத்தியில், விஷ ஊசி நடைமுறைக்கு பல்வேறு மாகாணங்களிலும் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஆனால் தாம்ஸ் க்ரீச் போன்றே சரியான ரத்த நாளத்தை கண்டறிவதில் சிக்கல் எழுவதால் தள்ளிப்போன மரண தண்டனைகளும் உண்டு. 2022 நவம்பரில் கென்னத் ஸ்மித் என்பவருக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனைக்கு உத்தரவானது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, சுமார் ஓராண்டுக்கும் மேலான காத்திருப்புக்குப் பின்னர், கடந்த மாதம் நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி வெற்றிகரமாக கொல்லப்பட்டார்.

நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி கென்னத் ஸ்மித் கொல்லப்பட்டதில், அந்த வகையிலான மரண தண்டனை அரங்கேற்றப்பட்ட முதல் நபராக அடையாளம் பெற்றார். ஆனால் நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, இடாஹோவில் தாமஸ் க்ரீச் விஷ ஊசி மூலமே மரண தண்டனை விதிப்புக்கு முடிவானார். ஆனால் அதற்கான முயற்சியில், ரத்த நாளத்தை கண்டறிவதில் எழுந்த தடுமாற்றம் காரணமாக தற்போதைக்கு உயிர் பிழைத்திருக்கிறார். கென்னத் ஸ்மித் போல ஓராண்டோ அல்லது அதற்கு மேலாகவோ, 73 வயதாகும் தாமஸ் க்ரீச் காத்திருக்க நேரிடலாம்.

Exit mobile version