Site icon Tamil News

அமெரிக்காவில் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த விமானப் பயணிகள்…

‘கிரவுட்ஸ்டிரைக்’ இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின்மீது விமானப் பயணிகள் சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.

கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாற்றால் உலகம் முழுவதும் பேரளவில் கணினிகள் முடங்கின. இதனால் ஏராளமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமடைந்தன. அத்துடன், வங்கிகள், மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு போன்ற சேவைகளிலும் இடையூறு ஏற்பட்டது.

இந்நிலையில், கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் தனது மென்பொருளைச் சோதித்துப் பார்த்ததிலும் அதனை நிறுவியதிலும் கவனக்குறைவாக இருந்ததே உலகெங்கும் இணையச் சேவை முடங்கக் காரணம் என்று கூறி, விமானப் பயணிகள் மூவர் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், ஆஸ்டினில் உள்ள கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

விமானச் சேவைகள் தடைபட்டதால் விமானப் பயணிகள் பலரும் தங்குமிடம், உணவு, மாற்றுப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு நூற்றுக்கணக்கான டொலர் செலவிட நேரிட்டதாக அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மற்றவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் போனதாகவும் அல்லது விமான நிலையத் தரையிலேயே உறங்க வேண்டியிருந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட விமானப் பயணிகளுக்கு கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.இதற்கிடையே, “இவ்வழக்கு ஏற்கத்தக்கதாக இல்லை. நாங்களும் எங்களை நீதிமன்றத்தில் உறுதியாகத் தற்காப்போம்,” என்று கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.

குறைபாட்டுடன் கூடிய மென்பொருளால் உலகெங்கும் எட்டு மில்லியனுக்கும் அதிகமான கணினிகள் பாதிக்கப்பட்டன.இதனால், டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 6,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்தது. இதற்காக கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்திற்கு எதிராகத் தாங்கள் நீதிமன்றத்தை நாடக்கூடும் என்று டெல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version