Site icon Tamil News

கமலா ஹாரிஸ் குறித்த பொய்த் தகவல் ர‌ஷ்யக் குழுவில் செயல்: மைக்ரோசாஃப்ட் தகவல்

இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், 13 வயது பெண் ஒருவரை வாகனத்தால் மோதி அப்பெண் பக்கவாதத்துக்கு ஆளானதாக சமூக ஊடகங்களில் பொய்த் தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.

அந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடந்ததாகவும் பெண்ணை மோதிய பிறகு திருவாட்டி ஹாரிஸ் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகவும் பொய்த் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்நடவடிக்கைக்குப் பின்னால் இருப்பது ர‌ஷ்யாவைச் சேர்ந்த ஒரு குழு என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த ர‌ஷ்யக் குழு, பொய்த் தகவல்களைப் பரப்பும் ரகசியமாகச் செயல்படும் குழு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழு, நடிகர் ஒருவருக்குப் பணம் கொடுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் போல் நடிக்கச் செய்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

‘கேபிஎஸ்எஃப்-டிவி’ என்று செயல்பாட்டிலேயே இல்லாத சான் ஃபிரான்சிஸ்கோ ஊடகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட குழு, சம்பவம் குறித்த பொய்த் தகவலைப் பரப்பியதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனனர்.

அந்த ர‌ஷ்யக் குழுவுக்கு மைக்ரோசாஃப்ட் ஸ்டார்ம்-1516 என்று பெயரிட்டுள்ளது. அது, இணையத்தில் கேலிச் செயல்களில் ஈடுபடும், ர‌ஷ்ய அரசாங்கத்துடன் ஒத்துப்போகும் குழு என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version