Site icon Tamil News

பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்த பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர்!(வீடியோ)

உத்தரபிரதேசம் மாநிலத்தில் காவல்நிலையத்தில் காத்திருந்த பெண் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் ’தற்செயலாக’ சுட்டதில், கவலைக்கிடமான நிலையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கோட்வாலி காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட CCTV காட்சிகள் பொதுவெளியில் வெளியாகி காண்போரை பதறச் செய்துள்ளன. தற்செயலாக நடந்த சம்பவம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அப்பாவி பெண் மீது காவல்துறை அதிகாரி அலட்சியமாக துப்பாக்கியை பிரயேகித்து இருப்பதாக பொதுமக்கள் குமுறி வருகின்றனர்.

மேற்படி CCTV காட்சிகளின்படி, காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒரு பெண்ணும் அவருடன் வந்த ஆணுமாக காத்திருக்கிறார்கள். அப்போது சக அதிகாரி வழங்கிய கைத்துப்பாக்கியை சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா என்பவர் அலட்சியமாக கையாள்கிறார். அக்கணம் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு எதிரிலிருந்த பெண்ணின் தலையில் பாய்கிறது.

https://twitter.com/i/status/1733081546817741253

சக அதிகாரியிடமிருந்து சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா கைக்கு மாறும் கைத்துப்பாக்கியும், அதனைத் தொடர்ந்து துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு பெண்ணின் தலையில் துளைத்து சாய்ப்பதுமான வீடியோ காட்சிகள் ஸ்லோ மோஷனில் விரிகின்றன. தனது கைக்கு வந்த கைத்துப்பாக்கியின் லாக்கை எஸ்.ஐ மனோஜ் சர்மா காரணமின்றியும், அலட்சியமாகவும் விடுவிப்பது காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. தலையில் குண்டு பாய்ந்த பெண், கவலைக்கிடமான நிலையில் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய எஸ்ஐ மனோஜ் சர்மாவை போலிஸார் தேடி வருகின்றனர். அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே பாஸ்போர்ட் சரிபார்ப்பு விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணிடம், பணம் கேட்டு பொலிஸார் மிரட்டல் விடுத்ததாக, அப்பெண்ணின் உறவினர்கள் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர்.

Exit mobile version