Tamil News

மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தி விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் ஒன்றியத்தின் அதிகாரசபையின் தலைவர் அ.ரமேஸ் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை பண்ணையாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

”பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்காதே”, ”மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி எப்போது வழங்கப்படும்”,”மேய்ச்சல் தரையினை வைத்து இனங்களிடையே முரண்பாட்டை தோற்றுவிக்காதே”,”மேய்ச்சல் தரையினை வைத்து அரசியல் இலாபம் தேடாதே” போன்ற பல்வேறு கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது பெரும்போக விவசாய செய்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் கால்நடைகள் மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்லப்படும்போதே விவசாய நடவடிக்கையினை பாதுகாப்பாக முன்னெடுக்கமுடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Exit mobile version