Site icon Tamil News

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய Update

வாட்ஸ்அப் தனது அடுத்த அசத்தல் அப்டேட்டை தந்துள்ளது. இதன் மூலம் தனது தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு டிபி புகைப்படமும், தொடர்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கு வேறொரு டிபி புகைப்படமும் வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த வாட்ஸ்அப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. அதேபோல் ‘லாக் சாட்’ என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றத்தை அறிமுகம் செய்தது.

இதன் மூலம், ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு மொபைல் எண்களிலும், வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் ப்ரோஃபைல் போட்டோ வைத்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு தன்முகப்பு படமும், இல்லாதவர்களுக்கு மாற்று தன்முகப்பு படத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஓர் அரணாக இந்த வசதி பார்க்கப்படும் என வாட்ஸ்அப் பீட்டாஇன்ஃபோ என்கிற இணையதளம் தெரிவிக்கிறது. மேலும், வாட்ஸ்அப்பில் பயனர் பெயர் அமைத்துக் கொள்ளும் வசதியும் சோதனை முயற்சியில் உள்ளது. தற்போது மொபைல் எண் மட்டுமே வாட்ஸ் அப்பில் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள கருவியாகவுள்ள நிலையில், பயனர் பெயர் வசதி மூலமாக பெயரைத் தேடி தொடர்பு கொள்ள இயலும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version