Site icon Tamil News

பிரான்ஸுக்கு தப்பி செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை தவறாக பயன்படுத்தி அவர் பயணிக்க முயன்றுள்ளார்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மதியம் 12.55க்கு இங்கிலாந்தின் லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-503 இல் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அங்கு, விமான சேவை அனுமதியின் போது அவர் வழங்கிய பிரான்ஸ் கடவுச்சீட்டில் சந்தேகம் கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள், அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சர்வதேச பொலீஸாரின் தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட கடவுச் சீட்டு பட்டியலில் இந்த கடவுச்சீட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபரிடம் இது தொடர்பில் மேலதிக விபரங்களை கேட்டபோது கடந்த 22ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து கொழும்பு ஆமர் வீதியில் உள்ள விடுதிக்கு வந்த போது அவரது இலங்கை கடவுச்சீட்டை அங்கிருந்த தரகர்கள் இருவர் பெற்றுக்கொண்டு இந்த பிரான்ஸ் கடவுச்சீட்டை கொடுத்ததாக தெரிவித்தார்.

இதன்படி, சந்தேக நபரை கைதுசெய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version